ஆட்டோக்காரர், "நான் படிக்காதவன். ஆனால் நீங்கள் படித்து வேலை தேட வந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மை கூறுவது எனக்கு தெரிகிறது. கஷ்டம் என்பது எல்லோருக்கும் வருவது தான். இந்த பணத்தை நான் எப்படியாவது சம்பாதித்து கொள்கிறேன். நீங்கள் நல்லபடியாக ஊர் போய் சேருங்கள்" என்றார். நான் கண் கலங்கி விட்டேன்.
மெட்ராஸ் தமிழன்
எங்கு சென்றாலும் நமது மெட்ராஸ் மாதிரி வருமா?
Friday, 4 May 2012
உங்களுக்கு ஏழரை நாட்டு சனியா?
ஆட்டோக்காரர், "நான் படிக்காதவன். ஆனால் நீங்கள் படித்து வேலை தேட வந்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மை கூறுவது எனக்கு தெரிகிறது. கஷ்டம் என்பது எல்லோருக்கும் வருவது தான். இந்த பணத்தை நான் எப்படியாவது சம்பாதித்து கொள்கிறேன். நீங்கள் நல்லபடியாக ஊர் போய் சேருங்கள்" என்றார். நான் கண் கலங்கி விட்டேன்.
Sunday, 8 April 2012
அபாய சங்கிலி
Thursday, 15 March 2012
இப்படியும் ஒரு அனுபவம்
ஒரு முறை அவர் தான் இருந்த வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு வீட்டுக்கு குடி பெயர்ந்தார். அந்த வீட்டில் அதற்கு முன்னர் பிராமண வகுப்பை சேர்ந்த ஒருவர் காலி செய்து விட்டு வேறு எங்கோ சென்று விட்டார். வீட்டில் இருந்த பழைய குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்யும்போது சாமிக்கு ஜோதிடத்தை பற்றிய பழங்கால புத்தகம் ஒன்று கிடைத்தது. அந்த வீட்டில் முன்பு இருந்தவர் விட்டு விட்டு சென்றிருக்கிறார். பொழுது போகாத நேரத்தில் சாமி இந்த புத்தகத்தை படிக்க தொடங்கி அதிலே மிகவும் ஈடுபட்டு லயித்து போய் விட்டார்.
சில மாதங்கள் கழித்து ஒரு நாள் சாப்பிடும் நேரம். என்னுடைய மற்றொரு நண்பர் கார்த்திக் என்பவர் தனக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்று சாமியிடம் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது சாமி "உங்களுடைய ஜாதகத்தையும் உங்களது மனைவியின் ஜாதகத்தையும் கொடுங்களேன், ஏதாவது தோஷம் இருக்கிறதா என்று பார்க்கிறேன்" என்று எதேச்சையாக கூறினார். கார்த்திக்கும் 'எதை தின்றால் பித்தம் தெளியும்' என்ற மன நிலையில் இருந்ததால் மறு நாளே இருவரின் ஜாதகத்தையும் சாமியிடம் கொடுத்தார். சாமி இரண்டு ஜாதகங்களையும் மிக நுட்பமாக பார்த்து விட்டு "சரியாக ஒரு மாதத்தில் உங்கள் மனைவி கற்பமாவதற்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறினார். ஏதோ நல்லது நடந்தால் சரி என்று நாங்கள் அதை அத்துடன் முடித்து கொண்டோம்.
காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக சரியாக ஒரு மாதத்தில் உண்மையிலேயே கார்த்திக்கின் மனைவி கர்ப்பமடைந்தார். பல வருடங்கள் காத்திருந்தவருக்கு மனம் ஆனந்தத்தில் துள்ளி குதித்தது. சரியாக இதை கணித்த சாமியை பற்றி போவோர் வருவோர் அனைவரிடமும் மாய்ந்து மாய்ந்து போய் கூறி விட்டார். வெகு விரைவில் சாமி நண்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார். அனைவரும் தங்களது ஜாதகங்களை அவரிடம் சென்று காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். அவரும் 'பரவாயில்லை, நண்பர்கள் தானே' என்று ஜாதகம் பார்க்க ஆரம்பித்து விட்டார். அப்போது தான் அவருடன் விதி விளையாடியது.
செளதியில் இரு வகை காவல் துறையினர் உண்டு. முதல் வகை நம்மூர் போலீசை போல. இரண்டாம் வகை, மத போலீஸ் எனப்படும் "முத்தாவா" என்ற மத குருமார்கள். நீண்ட தாடியுடும், குட்டை பாவாடையுடனும் உலா வரும் இவர்கள் வைத்தது தான் சட்டம். சாதாரண போலீசை விட இவர்களுக்கு அதிகாரங்கள் அதிகம். இவர்களுடைய அட்டகாசம் தாங்காமல் பல செளதிகளே இவர்களை வெறுப்பார்கள். மத போலீஸ் என்றாலும் இவர்கள் பல இடங்களில் வேலையில் இருப்பார்கள்.
செளதியில் ஜோதிடம் போன்றவைகளுக்கு இடமே இல்லை. யாராவது இது போன்று ஈடுபடுவது தெரிந்தால் உடனடியாக அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதனால் பொதுவாகவே யாரும் வெளிப்படையாக இதை பற்றி பேசவே பயப்படுவார்கள்.
சாமியுடைய 'பிராபல்யம்' கூட வேலை செய்யும் ஒரு முத்தாவா காதுக்கு எட்டி விட்டது. ஒரு நாள் அவன் சாமியை கூப்பிட்டு விசாரித்தான். சாமிக்கு வெலவெலத்து விட்டது. "இல்லை, நான் எதேச்சையாக தான் கூறினேன் அது உண்மையாகி விட்டது" என்றெல்லாம் கூறி சமாளித்தான். முத்தாவா அசரவில்லை. "என்னுடன் வா" என்று அவனை ஒரு காரில் உட்கார வைத்து எங்கோ வெகு தூரம் ஒட்டி சென்றான். வழி முழுவதும் யார் யாருடனோ கைபேசி மூலம் அரபியில்தொடர்பு கொண்டு பேசிக்கொண்டே சென்றான். சாமிக்கோ உதறல் எடுக்க தொடங்கி விட்டது. இன்று கதை கந்தல் தான் என்று நினைத்தான். சாமியுடன் முத்தாவா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வழி முழுவதும் சிகரெட்டை ஊதி தள்ளி கொண்டே வண்டியை ஓட்டினான்.
ஊருக்கு வெளியே சென்றவுடன் ஒரு மிக பெரிய வீட்டின் முன் கார் நின்றது. அந்த வீட்டின் முன் பல கார்கள் நின்று கொண்டிருந்தன. இறங்கி உள்ளே இருவரும் சென்றார்கள். அங்கு ஒரு பெரிய அறையில் ஒரு பத்து செளதிகள் இருந்தனர். முத்தாவா தான் அவர்களை தொலைபேசி மூலம் அங்கு வரவழைத்து இருந்திருக்கிறான். அறையின் நடுவில் ஒரு நாற்காலியில் இவனை உட்கார வைத்து விட்டு அனைவரும் இவனை சூழ்ந்து கொண்டனர். முத்தாவா பேச ஆரம்பித்தான்.
"சாமி, நான் உன்னை இங்கு அழைத்து வந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். எனக்கு ஒரு பெரிய பிரச்னை உள்ளது. எனது தங்கையை அவளது கணவன் சரியாக நடத்துவதில்லை. இவள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி 'இனி அவனுடன் குடித்தனம் நடத்த மாட்டேன்' என்கிறாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை", என்றான். அவன் என்ன கூற வருகிறான் என்று புரிந்தது. மத குருவாக இருந்து கொண்டு வேற்று மத ஜோசியக்காரனிடம் கேட்க வேண்டி உள்ளதே என்ற தர்மசங்கடம். சுற்றி இவனது சொந்தக்காரர்கள் வேறு இருக்கிறார்கள்.
சாமி உடனே சமயோசிதமாக குறிப்பறிந்து கொண்டு "நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்களது தங்கையின் பிறந்த தேதி, மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை மட்டும் கூறுங்கள்" என்றான். அதற்குள் ஒரு தட்டு நிறைய பேரீச்சம் பழமும் பாலில்லாத தேநீரும் வந்தது. எல்லா செளதிகளும் இவையே பார்த்து கொண்டிருந்தனர்.
சாமி சில கணக்குகளை போட்டு விட்டு "தயவு செய்து நீங்கள் உங்களுடைய தங்கையை கட்டாய படுத்தாதீர்கள். அவர்களுடைய திருமணம் நிலைக்க வாய்ப்பு மிக குறைவு" என்று கூறி விட்டான். அறையில் மயான அமைதி. 'கடவுளே, இவன் நம்மை என்ன செய்ய போகிறானோ தெரியவில்லையே' என்று சாமிக்கு உள்ளூர உதறல்.
திடீரென்று முத்தாவாவின் கைபேசி ஒலித்தது. எங்கிருந்து அழைப்பு வந்தது என்று பார்த்த உடனே அனைவரும் கேட்கும்படியாக 'ஸ்பீக்கரில்' போட்டு விட்டான். மறு முனையில் தங்கையின் கணவன். "உங்களுடைய தங்கையை நான் விவாக ரத்து செய்ய போகிறேன். எனக்கும் அவளுக்கும் ஒத்து வரவில்லை" என்று கூறி வைத்து விட்டான். முத்தாவவின் முகம் வெளிறி விட்டது. யாரும் எதுவுமே பேசவில்லை.
நீண்ட நேர அமைதிக்கு பிறகு நிமிர்ந்து சாமியை பார்த்தான். மெல்லிய குரலில் மற்றவர்களிடம் ஏதோ கூறினான். தரையில் ஒரு துண்டை விரித்து போட்டான். அந்த அறையில் இருந்த அனைவரும் நூறு, இருநூறு என்று பணத்தை போட்டனர். அதை அப்படியே மூட்டையாக கட்டி சாமியிடம் முத்தாவா கொடுத்தான்.
சாமிக்கு இப்போது மிகவும் தர்ம சங்கடமாகி விட்டது. "நான் இதை பணத்துக்காக செய்ய வில்லை. ஏதோ சில நண்பர்கள் கேட்டார்களே என்று விளையாட்டாக ஆரம்பித்தேன். எப்படியோ உங்களுடைய காதுகளுக்கு அது எட்டி விட்டது. வருத்தத்தில் இருக்கும் போது இந்த பணம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது கொடுங்கள். வாங்கி கொள்கிறேன்" என்றான். முத்தாவா வலுக்கட்டாயமாக அந்த மூட்டையை சாமியின் கைகளில் திணித்து விட்டு அவனை வீடு வரை வண்டியில் விட்டான்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாமி நண்பர்களுக்கு கூட ஜோசியம் பார்ப்பதை விட்டு விட்டான். அவனை வம்புக்கு இழுப்பதற்காகவே வேண்டும் என்றே யாராவது ஜாதகத்தை பார்க்க கூறினால் "ஏதோ பிழைப்புக்கு வந்தோமா, வேலையை பார்த்தோமா என்று நான் பாட்டுக்கு இருக்கிறேன், ஆளை விடுங்கடா சாமி" என்று சாமி அலறுவதை பார்த்து நாங்கள் சிரிப்போம்.
Wednesday, 29 February 2012
செந்தமிழ் நாடெனும் போதினிலே
பொழுது போகாமல் இருக்கும் போது ஒரு நாள் கணினியில் பல்வேறு வானொலி நிலையங்களை கேட்டுக்கொண்டிருந்தேன். எதேச்சையாக சிங்கப்பூர் வானொலியின் 'ஒலி'யை கேட்க நேர்ந்தது. நான் கேட்ட அந்த அரை மணி நேரத்தில் சத்தியமாக ஒரு வார்த்தை ஆங்கிலம் கூட இல்லை. அவ்வளவு இயல்பாக நல்ல தமிழில் மிக அருமையாக நிகழ்ச்சியை வழங்கினார்கள்.சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. 'கடவுசீட்டு' என்ற வார்த்தையை நான் அன்று தான் கற்றுக்கொண்டேன். கடவுசீட்டு என்றால் பாஸ்போர்ட்டாம். "இப்படி தெளிவாக தமிழில் கூறுவதை விட்டுவிட்டு ஏன் 'புரியாத' மொழியில் படுத்துகிறார்கள்" என்று எனது மகள் கேட்டாள். "இது தான் தமிழ், நாம் பேசுவது தமிழே அல்ல" என்று நான் கூறினேன்.
நமது பேச்சு வழக்கில் தான் எத்தனை ஆங்கில வார்த்தைகள் கலந்து விட்டன! காலையில் எழுந்தவுடன் 'காபி' குடித்தபடி 'பேப்பர்' படித்துவிட்டு, பின் 'வாக்கிங்' சென்று வந்தவுடன் 'பாத்ரூமில்' குளித்து விட்டு 'ப்ரேக்பாஸ்ட்' சாப்பிட்டு விட்டு 'பஸ்' பிடித்து 'ஆபீசுக்கு' சென்று .....இதை ஒரு இலங்கை தமிழரிடமோ மலேசிய தமிழரிடமோ கொடுத்து படிக்க சொன்னால் அடிக்க வந்து விடுவார்கள்!
மத்திய புகை வண்டி நிலையத்தில் (சரி, சரி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என்று தூய தமிழில் கூறுகிறேன்) ஒரு முறை முன்பதிவு செய்ய சென்றிருந்தேன். எனக்கு கிடைத்த படிவத்தில் ஒரு பக்கம் ஆங்கிலமும் மறு பக்கம் தமிழிலும் இருந்தது. சரி, தமிழில் எழுதலாமே என்று மெனக்கெட்டு பெயர் புறப்படும் ஊர், செல்லும் ஊர், பயணிகளின் பெயர் என்று எல்லாவற்றிலும் தமிழிலேயே எழுதி 'கெளன்ட்டரில்' கொடுத்தேன். (இதை பெரியார் தமிழில் எழுதினால் கவுண்ட்டர் என்று ஆகி விடும், அப்புறம் சாதி வெறியன் என்று கூறி விடுவார்கள் அதனால் counter என்று கூறலாமா? )
படிவத்தை வாங்கியவர் என்னை வேற்று கிரகத்தில் இருந்து வந்து இறங்கியவனை போல ஒரு பார்வை பார்த்து விட்டு நமுட்டு சிரிப்புடன் அதை ஆங்கிலத்தில் கணினியில் தட்டெழுதினார் ('டைப்' அடித்தார் - அப்பாடா, புரிந்ததா?)எனக்கு பின்னால் வரிசையில் நின்றவர்கள் என்னை எரித்து விடுவது போல பார்த்தார்கள். 'ஏன்யா யோவ், ஊட்ல சொல்லிகினு வண்ட்டியா சாவு கிராக்கி, இவன் ஒர்த்தனால இன்னிக்கு அல்லாருக்கும் லேட்டு, டாமேஜர் பெண்டு நிமித்த போறான்யா " என்று சிறப்பான சென்னை செந்தமிழில் யாரோ என்னை அர்ச்சனை செய்ய அங்கிருந்து அவசரம் அவசரமாக நான் கிளம்ப வேண்டியதாக போய் விட்டது.
சென்னை மாநகராட்சி வாசலில் நின்று கொண்டிருந்த பொது 'எமிரா வெதவா, நேனு அப்புடு செப்தானு நீக்கு" என்று ஒரு கரை வெட்டி கை பேசியில் ('மொபைல்') யாரையோ திட்டி கொண்டிருந்தார். கட்டிடத்தின் மேலே 'தமிழ் வாழ்க' என்று பெரிய பலகையில் எழுதி இருந்தனர்.
சரி, துணிமணிகளை வாங்க 'டீ' நகர் போகலாம் என்று ("தியாகராய நகர் என்றால் யாருக்கு புரியும்?) 'ஆட்டோவில்' ஏறினேன். வழக்கம் போல 'மீட்டர்' இல்லை. பேரம் பேசி படிந்த பின் வேண்டா வெறுப்பாக என்னை ஏற்றிக்கொண்ட ஓட்டுனன் வழி முழுவதும் வசை பாடிக்கொண்டே வந்தான். லேசாக பசிப்பது போல இருந்தது. ஒரு 'டீ' கடையில் இறங்கி தேநீர் செய்யும்படி கூறினேன். "ஓரி சாயா" என்று உள்ளே யாரிடமோ சம்சாரித்தான். 'டீ'யை குடித்து விட்டு சாலை ஓரமாக நடந்து செல்லும் போது "அரே பாய், மைனே போலா தா ந" என்று செருப்பு கடைக்காரர் யாரிடமோ எதையோ கூறிக்கொண்டிருந்தார். உடுப்பி ஹோட்டல் கல்லாவில் ஒருவர் யாரிடமோ "நானு நிமகே அவாகலே மாடி கொடுதீனி" என்று சில்லறை பாக்கியை கொடுத்தார். அட கடவுளே. மெட்ராசில் ஒரு தமிழன் கூட கிடையாதா?
வீட்டுக்கு வந்து 'டீ.வி.'யை போட்டால் "உங்கல் பேவரிட் ஷோவை கான் தவுர வேண்டாம்" என்று அரை குறை ஆடையுடன் கிளுகிளுப்பு ஊட்டுவதாக நினைத்து கொண்டு ரவிக்கைக்கு பதிலாக இரண்டு நூல்களில் மேலாடையை பிடித்து கொண்டு முதுகை முழுவதுமாக காட்டி கொண்டு கிழட்டு நடிகை பேசிக்கொண்டு இருந்தாள். இதை அணைத்து விட்டு வானொலியை கேட்டால் "ஒன்ன எவண்டி பெத்தான்" என்று பாடல் வருகிறது. ச்சே!
ஒரு முப்பது வருடங்களில் தமிழ் நாடு எப்படி மாறி விட்டது? பாவாடை சட்டை அணிந்து கொண்டு நெற்றியில் அழகிய குங்குமம் வைத்து கொண்டு அழகாய் வந்த அந்த சிறிய பெண்கள் எங்கே சென்றார்கள்? இப்போது எங்கு பார்த்தாலும் நைட்டி தேசிய உடையாகி விட்டதே. மார்கழி மாதத்தில் வீட்டுக்கு வீடு கேட்கும் அந்த ஆண்டாள் பாசுர பாடல்கள் இப்போது காணாமல் போய் விட்டதே. வாரா வாரம் கல்கியில் வரும் பொன்னியின் செல்வனை படிக்க ஆர்வமாக இருந்த அந்த கூட்டம் எங்கே? இப்போது யாரை பார்த்தாலும் டீ.வி. முன்பு உட்கார்ந்து விடுகிறார்களே. நல்ல தமிழை இனி கேட்கவே முடியாதா?
ஊரில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தேன். உள்ளே காத்திருக்கும் போது 'பாத்ரூம்' எங்கே என்று தெரியவில்லை. யாரையோ போய் கேட்க "அங்கே பாருங்கள்" என்றார். மேலே பார்த்தால் "ஒப்பனை அறை" என்று யாருக்குமே புரியாத தமிழில் எழுதி இருந்தார்கள். இனிமேல் தாங்காது டா சாமி, நான் இலங்கை தமிழர்களிடமே தமிழை கற்று கொள்கிறேன். ஆளை விடுங்கள்.
Wednesday, 25 January 2012
ஐ.என்.எஸ் விக்ராந்த்
1965ல் நடந்த இரண்டாம் இந்திய-பாக் போரில் PMS Ghazi என்ற நீர்மூழ்கி கப்பலை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா இரவல் கொடுத்தது. அப்போது இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை.
பாக் கப்பற்படையின் மிக பயங்கரமான மற்றும் அந்த காலத்தின் அதி நவீனமான நீர் மூழ்கி கப்பல் தான் இந்த PMS Ghazi. இந்த கப்பலில் torpaedo எனப்படும் நெடுந்தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகள் 28 இருந்தன. ஒரு பெரிய நகரத்தையே அழிக்க கூடிய இந்த கப்பலுக்கு ஒரு முறை எரி வாயுவை நிறப்பினால் 11000 மைல்கள் செல்ல கூடிய அளவுக்கு போதுமானதாக இருந்தது. அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு எரி வாயுவை நிரப்ப வேண்டியதில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
1965 போரில் இந்த கப்பலை சமாளிப்பது இந்திய கப்பற்படைக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது.
‘ஒரு போரில் முதலில் இறப்பது உண்மை’ என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு (The first casualty in a war is truth). அதற்கு ஏற்றாற்போல செப்டெம்பர் 23, 1965ம் ஆண்டு ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா என்கிற பிரம்மாண்டமான இந்திய கப்பலை அழித்து விட்டதாக பாக் அரசாங்கம் மார்தட்டி கொண்டது. அது மட்டுமல்ல, PNS Ghaziயின் தளபதிக்கு மெடல் வேறு கொடுத்து கெளரவித்தது!
ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை!!உண்மையை நிரூபிக்க போர் முடிந்த பிறகு புது தில்லியில் உள்ள வெளி நாட்டு தூதர்கள் மற்றும் உலக பத்திரிகையாளர்களை எல்லாம் இந்திய அரசு பம்பாயில் ஐ.என்.எஸ். பிரம்மபுத்ரா கப்பலுக்குள் அழைத்து சென்று விருந்து கொடுத்தது. இருந்தாலும் இந்திய கப்பற்படை பொய் சொன்ன பாகிஸ்தானை பழி தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்பத்தை நோக்கி காத்திருந்தது.
இது ஒரு புறம் இருக்கட்டும். 1965ல் நடந்த போரில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த பிறகு கூட ‘தாங்கள் தோல்வியே அடையவில்லை’ என்றும் ஐ.நா. சபை கேட்டுக்கொண்டதன் பேரில் வெறும் “போர் நிறுத்தம்” செய்ததாகவும் பாக் ராணுவ தளபதி மார் தட்டிக்கொண்டான். ஒரு பெரிய பூசணிக்காயை புதைப்பது போல இருந்தது இந்த வாதம். இதையும் இந்திய அரசாங்கம் மறக்கவில்லை. இப்போது 1971க்கு வருவோம். 1965 போரின் பிறகு இந்திய கடற்படையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை அரசாங்கம் உணர்ந்தது. அதனால் ஐ.என்.எஸ்.விக்ராந்த் எனப்படும் போர் விமானங்களை தாங்க கூடிய மிக பிரமாண்டமான கப்பலை (aircraft carrier) இந்தியா வாங்கியது. இதை பாக் கப்பற்படை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே எப்படியாவது விக்ராந்த்தை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டது. அதனால் PNS Ghaziக்கு mines எனப்படும் அதிரடி குண்டுகளை கடலிலே ஆங்காங்கு வைப்பதற்கு தகுந்தபடி தன்னை தயார் படுத்திக்கொண்டது.
இந்த மைன்ஸ் (Mines) எனப்படும் குண்டுகள் சாதாரணமான குண்டுகள் அல்ல. இவற்றை ஏதாவது பொருள் தொடும் வரை சாது போல கடலில் மிதந்து கொண்டிருக்கும். ஏதாவது படகோ, கப்பலோ இவற்றை தெரியாமல் தொட்டுவிட்டால் அதோகதி தான். படு பயங்கர சத்தத்துடன் இதை தொடும் கப்பல் வெடித்து சுக்கு நூறாக்கி விடும். எப்படியாவது ஐ.என்.எஸ் விக்ராந்த்தை நாசமாக்கி விட வேண்டும் என்று 92 மாலுமிகளுடன் நவம்பர் 14, 1971 அன்று கராச்சியை விட்டு PMS Ghazi வங்காள விரிகுடாவை நோக்கி கிளம்பியது. அப்போது கூட இந்தியாவிடம் ஒரு நீர் மூழ்கி கப்பல் கூட இல்லை என்பது தான் பரிதாபம்.
அப்போது இந்திய கப்பற்படையின் துணை தளபதியாக என். கிருஷ்ணன் என்ற தமிழர் இருந்தார். பல மெடல்களை வாங்கிய இந்த மாபெரும் வீரரின் சாகசங்களை நினைத்தால் இப்போது கூட மெய் சிலிர்க்கிறது.
பாக்கின் நீர் மூழ்கி கப்பல் கராச்சியை விட்டு கிளம்பி விட்டது என்பதை நமது உளவாளிகள் மூலம் தெரிந்து கொண்டார். எப்படியாவது விக்ராந்த்தை காப்பாற்றியே ஆக வேண்டும், அதற்கு என்ன செய்வது என்று யோசித்தார். ஒரு அருமையான திட்டத்தை வகுத்தார் கிருஷ்ணன்.
சென்னை துறைமுகத்திலிருந்து அந்தமானுக்கு விக்ராந்த் கப்பலை பாதுகாப்பாக எடுத்து சென்று விட்டார். அடுத்து பாக் நீர்மூழ்கி கப்பலை எப்படியாவது பொறி வைத்து பிடிக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று நினைத்தார். விக்ராந்த் போன்ற மிக பிரமாண்டமான கப்பலில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் எப்போதும் இருப்பார்காள். அதனால், அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவை சாதாரண கப்பல்களை விட மிக மிக அதிக அளவில் தேவைப்படும். இதை உணர்ந்த கிருஷ்ணன், விசாகப்பட்டினம் நகரத்தில் இருக்கும் ஒப்பந்தக்காரர்களிடம் சாதாரணமாக வாங்கும் அளவை விட மிக அதிகாமாக உணவு பொருட்களை வாங்கினார். இவருக்கு தெரியும், இந்தியாவில் உள்ள பாக் உளவாளிகள் இதை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று.
ஒரு ஊரில் திடீரென்று மிக அதிக அளவில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைகளுக்கு கிராக்கி ஏற்பட்டால் விலை உயர தானே செய்யும். இவர் வைத்த பொறியில் பாக் கப்பற்படை விழுந்து விட்டது. உளவாளிகள் மூலமாக விக்ராந்த் விசாகப்பட்டிணத்தில் இருக்கிறது என்ற தகவல் பாக் அரசாங்கத்துகு எட்டி விட்டது. உடனே PMS Ghazi கப்பலுக்கு ஒரு அவசர உத்தரவு சென்றது. அதை கேட்டால் இப்போது கூட குலை நடுங்குகிறது. அதாவது, விசாகப்பட்டிணத்தில் விக்ராந்த் கப்பல் இருப்பதால் அந்த துறைமுகத்தையே தவிடுபொடியாக்கி விடவேண்டும். அது மட்டுமல்ல, அந்த ஊரையே நாசமாக்கி விடவேண்டும் என்பது தான் அந்த உத்தரவு!
இந்திய கப்பற்படையில் ஐ.என்.எஸ் ராஜ்புத் என்ற மற்றொரு destroyer ரகத்தை சேர்ந்த கப்பல் இருந்தது. எப்படியாவது பாக் கப்பலை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற இலக்கு அதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. பம்பாயிலிருந்து கொழும்பு வந்து அங்கு எரி பொருளை நிரப்பிக்கொண்ட பின் விசாகப்பட்டிணத்தை நோக்கி புறப்பட்டது ஐ.என்.எஸ். ராஜ்புத். ஏற்கனவே செய்து கொண்ட ஏற்பாட்டின்படி ஐ.என்.எஸ் ராஜ்புத்துக்கு கம்பியில்லா வானொலி மூலம் பல தகவல்கள் பரிமாறப்பட்டன. பாக் உளவாளிகள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து வேண்டும் என்றே பரிமாறப்பட்ட தகவல்கள் இவை!
ஒரு மிக பெரிய கப்பல் ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் அதிலிருந்து இப்படி ஏகப்பட்ட தகவல்கள் கம்பியில்லா வானொலி மூலம் பரிமாறி கொள்ளப்படும். அது மட்டுமல்ல, விக்ராந்த் கப்பலிலிருந்து ஒரு மாலுமி அனுப்புவது போல ஒரு தந்தியும் ஐ.என்.எஸ். ராஜ்புத்திலிருந்து அனுப்ப பட்டது. “உயிருக்கு போராடி கொண்டிருக்கும் எனது தாயாரின் நிலை எப்படி உள்ளது?” என்று ஒரு மாலுமி கேட்பது போல ஒரு போலி தந்தி அனுப்ப பட்டது. இவை அனைவற்றையும் பாக் உளவாளிகள் கவனித்து கொண்டே இருந்தனர்.
இதற்குள் பாக் நீர்மூழ்கி கப்பல் விசாகப்பட்டிணத்தை நெருங்கி விட்டது. ஆனால் இந்தியாவிடம் நீர்மூழ்கி கப்பல் இல்லாததால் எங்கே இந்த கப்பல் உள்ளது என்று தான் தெரியவில்லை. அப்போது கம்பியில்லா வானொலி மூலம் ஒரு செய்தி பாக் கப்பலிலிருந்து கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) உள்ள சிட்டகாங் நகருக்கு அனுப்ப பட்டது. அதாவது ஒரு விதமான lubrication எண்ணெய் அவசரமாக தேவை படுகிறது என்பது தான் அந்த செய்தியின் சாராம்சம். கம்பியில்லா வானொலியில் என்னென்ன சம்பாஷணைகள் நடைபெறுகின்றன என்று இந்திய கப்பற்படையினரும் அல்லவா கேட்டுக்கொண்டிருந்தனர்! உடனே அவர்களுக்கு தெரிந்து விட்டது, பாக் கப்பல் இப்போது விசாகபட்டிணத்தின் வெகு அருகில் இருக்கிறது என்று. ஏனெனில், அவர்கள் கேட்ட அந்த எண்ணெய் நீர்மூழ்கி கப்பல்களில் மட்டும் தான் உபயோகப்படுத்தப்படும்.
இந்த செய்தியை கொடுத்த பாக் மாலுமி தான் எத்தனை பெரிய ஆபத்துக்கு வித்திட்டுள்ளான் என்பதை அப்போது அறிந்திருக்க ஞாயமில்லை. அதுமட்டிமல்ல, சரித்திரத்தையே மாற்றும் அந்த நிகழ்ச்சிக்கு அஸ்திவாரமும் போட்டு விட்டான் அவன்!
டிசம்பர் 4, 1971. ஐ.என்.எஸ். ராஜ்புத் விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து ரோந்துக்காக புறப்பட்டது. இந்த சுற்றுப்புறத்தில் தான் எங்கோ பாக் கப்பல் இருக்கும் என்பது தோராயமாக தெரியும், ஆனால் எங்கே என்று தான் தெரியாது. துறைமுகத்தை விட்டு கிளம்பிய ராஜ்புத்தின் மாலுமிக்கு ஒரு பொறி தட்டியது. ஒரு வேளை நம்மை விக்ராந்த் என்று நினைத்து பாக் கப்பல் போட்டு தள்ளி விட்டால்?
சட்டென்று படு உஷாராகி கப்பலின் இஞ்ஜினை அணைத்து விட்டார். தன்னுடைய ராடாரில் பார்த்தார். தண்ணீரில் ஒரு அசாதாரணமான மாற்றம் (disturbance) இருப்பதை கருவி காட்டியது. சற்றும் தாமதிக்காமல் இரண்டு ஏவுகணைகளை அந்த கொந்தளிப்பை நோக்கி ஏவினார். அப்போது மணி இரவு 12.05. படு பயங்கரமாக சத்ததுடன் பல மிக பெரிய வெடிகள் சரமாரியாக கடலில் வெடித்தனர். விசாகப்பட்டிணம் கடற்கரையில் இருந்த வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் அதிர்ச்சியில் சிதறின. ஏதோ பூகம்பம்தான் நடக்கிறது என்று மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பிறகு மயான அமைதி.
மறு நாள் காலை. கடலுக்குள் சென்ற மீனவர்கள் துறைமுகத்தின் வாயிலில் ஒரு மிக பெரிய எண்ணை கசிவு (oil slick) இருப்பதாக கூறினர். இந்திய கடற்படையின் diverகள் கடலுக்கடியில் சென்று பார்த்தனர். அவர்கள் கண்ட காட்சி ரத்தத்தையே உறைய வைத்து விட்டது. 92 மாலுமிகளின் சடலங்களும் பாக் நீர் மூழ்கி கப்பலுக்குள்ளேயே சிதறி சின்னாபின்னமாக இருந்தது. கப்பலில் இருந்து பாக் தளபதியின் முத்திரையும் (official seal) பல அரிய பாகங்களையும் இந்திய கப்பற்படையினர் மேலே கொண்டு வந்தனர்.
விசாகப்பட்டிணம் பிழைத்தது. அது மட்டுமல்ல. பாகிஸ்தானின் ஒரே நீர்மூழ்கி கப்பலும் அழிந்தது.
அதற்கு பிறகு போரில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியபின் மறக்காமல் நமது இராணுவத்தினர் Surrender Documentல் பாகிஸ்தானின் தளபதி நியாசியை கையெழுத்திட வைத்தனர்.
இந்த அதி அற்புதமான செயலுக்கான சூத்திரதாரியான கிருஷ்ணனை பிரதமர் இந்திரா வெகுவாக பாராட்டினார்.
போர் முடிந்து ஐ.என்.எஸ் விக்ராந்த் சென்னை வந்தது. மக்கள் அனைவரும் உணர்ச்சி பெருக்கில் சாலைகளில் கொண்டாட ஆரம்பித்தனர். எத்தனை பெரிய வெற்றி இது! நம் தாய் நாட்டுக்காக எத்தனை பேர் தங்கள் உயிரை கொடுத்திருந்திருப்பார்கள்? பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 3 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக ஐ.என்.எஸ் விக்ராந்த் திறந்து விடப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் முதன் முறையாக இந்திய கப்பற்படையின் மாணிக்கம் (jewel in the crown) விக்ராந்துக்குள் சென்று பார்த்தனர். கப்பலுக்குள் இந்திய தேசிய கீதம் கப்பற்படையின் bandடினால் வாசிக்கப்பட்டது. தேசிய கீதம் முடிவடைவதற்குள் பலர் அழுது விட்டனர். உணர்ச்சிமயமான அந்த அரிய சந்தர்ப்பத்தை பார்த்து பரவசமடைந்தவர்களுள் நானும் ஒருவன்.
Thursday, 17 November 2011
வீடு
எனது தந்தை வங்கியில் வேலை செய்து கொண்டிருந்ததால் அடிக்கடி ஊர் மாற்றம் செய்து விடுவார்கள். 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் ஒரே பதவியில் இருக்க கூடாது என்று எதோ ஒரு சட்டமாம். திடீரென்று ஒரு நாள் எனது தந்தைக்கு பதவி உயர்வு கொடுத்து ஹைதராபாதுக்கு மாற்றி விட்டார்கள். நாங்கள் எல்லோரும் மிகவும் சோகமாகி விட்டோம். எனது தாயாருக்கு நன்றாக அனுபவித்து கொண்டிருந்த வீட்டை விட்டு செல்ல வேண்டுமே என்ற கவலை. பள்ளியில் நண்பர்களை எல்லாம் விட்டு விட்டு புதிய ஊருக்கு செல்ல வேண்டுமே என்ற வெறுப்பு எங்களுக்கு. என்ன செய்வது? வேறு வழியில்லாமல் எங்களது தந்தை வீட்டை வாடகைக்கு விட்டு விட்டார். நாங்கள் எல்லோரும் ஹைதராபாதுக்கு சென்றோம்.
அந்த வீட்டில் எனது பெற்றோர் தனியாக வசித்து வந்தனர். ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வந்து அவனுக்கு வாயிலிருந்து ரத்தம் வரும் வரை தர்ம அடி கொடுத்தனர். கடைசியில் எனது தந்தை அவனை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் போனால் போகிறது என்று விட்டுவிட்டார். இந்த சம்பவத்துக்கு பிறகு எனது தாயார் பல நாட்களுக்கு மிகவும் பயந்து போயிருந்தார்.
Friday, 20 May 2011
சுமை
சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் எனது தாயார் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு கிட்டத்தட்ட 80 வயது இருக்கும். அவரும் அவரது மனைவியும் தனியாக ஒரு வீட்டில் வாழ்கின்றனர். அவர்களது ஒரே மகள் அமெரிக்காவில்
தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் இருக்கிறாளாம்.
சம்பிரதாயமான சில வார்த்தைகளுக்கு பிறகு பெரியவர் திடீரென்று மனம் திறந்து பேச துவங்கினார். "நீங்கள் 'மெயில்' செய்தித்தாளை படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டார். நான் சிறுவனாக இருந்த பொழுது 'தி மெயில்' என்ற ஆங்கில நாளேடு மிக பிரபலமாக
இருந்தது. நான் என்ன கூற போகிறேன் என்று அறிய மிக ஆவலுடன் பெரியவர் என்னை உற்று பார்த்து கொண்டிருந்தார். "எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் ஏனோ திடீரென்று அந்த நாளேடு நின்று விட்டதே" என்றேன்.
பெரியவரின் முகம் சட்டென்று வாடிவிட்டது. எனக்கோ மிக தர்ம சங்கடமாக போய் விட்டது. "ஏன் கேட்கிறீர்கள்?" என்றேன். பெரியவர் ஒரு பெரிய பெருமூச்சுடன் தொடர்ந்தார்.
அந்த செய்தித்தாளின் தலைமை நிருபராக பல வருடங்கள் பணி புரிந்து நான் ஓய்வு பெற்றேன். மாலை செய்தித்தாள் என்பதால் , மின்சார ரெயிலில் போவோர், அலுவுலகம் முடிந்து வீட்டுக்கு செல்வோர் என்று பலரும் மிக ஆவலுடன் வரிசையில் நின்று வாங்கி செல்வார்கள். அதை ஒரு பொற்காலம் என்றே கூறலாம்" என்று கூறியபடி குவளையில் இருந்த தண்ணீரை பெரியவர் குடித்தார்.
அவர் பேசுவதை நான் இடைமறிக்க விரும்பவில்லை. பெரியவர் குரலை கனைத்து கொண்டு தொடர்ந்தார். "ஹிந்து பேப்பருடன் எங்களால் போட்டி போட முடியவில்லை. சிறிது சிறிதாக எங்களது செலவுகள் ஏறிக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் தாக்கு பிடிக்க
முடியாது என்று 1981ம் ஆண்டு மெயில் செய்தித்தாளை மூடிவிட்டார்கள்" என்றார். அதை கூறும்போதே அவருக்கு குரல் கரகரத்தது. ஏதோ கூட்டத்தில் குழந்தையை தவற விட்ட தாயை போன்ற தவிப்பு அவரது குரலில் ஆழ்மனது ஏக்கம் தெரிந்தது.
சிறிது நேரம் அவருடன் இருந்து விட்டு நான் விடை பெற்றேன்.ஆனால் நெடு நேரம் அவர்
கூறியதை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.
இன்றைய தலைமுறையினர் எத்தனை பேருக்கு 'மெயில்' என்று ஒரு செய்தித்தாள் இருந்தது என்று தெரியும்? அந்த செய்தி தாளை போட்டி போட்டுக்கொண்டு வாங்குவார்கள் என்று எனது தந்தை கூறியுள்ளார். ஒரு 30 வருட காலத்தில் சுவடே இல்லாமல் மறைந்து விட்ட ஒரு செய்தி தாளை பற்றி அந்த பெரியவர் எவ்வளவு ஏக்கத்துடன் பேசினார் என்று எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இப்போது கூட சென்னை மவுண்ட் ரோடில் உள்ள ஹிந்து நாளேட்டிற்கு அடுத்த கட்டிடத்தில் 'தி மெயில்' என்று எழுதியிருக்கும் அந்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லும் போதெல்லாம் பெரியவரின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவில் வருகின்றன.

உண்மையில் நாம் அனைவருமே பழைய நினைவுகளின் அடிமைகளாக உள்ளோம் அல்லவா? ஒரு முறை எனது மகள் எதையோ வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்க நான்
மறுத்துவிட "பத்து ரூபாய் தானேப்பா" என்றாள். எனக்கு கடும் கோபம் வந்து விட்டது. "அது என்ன பத்து ரூபாய் ‘தானே’ என்று ஒரு இளக்காரம்? உனக்கு அதன் மதிப்பு தெரியுமா? நான் பள்ளிக்கு செல்ல இரண்டு பஸ் மாறி தினமும் கஷ்ட்டப்பட்டு போனேன். நீ என்னடாவென்றால் பொறுப்பே இல்லாமல் இருக்கிறாய்" என்று பொரிந்து தள்ளிவிட்டேன்.
இதை கேட்ட எனது மனைவி "இன்னும் எத்தனை வருடங்கள் தான் நீங்கள் இதே பல்லவியை பாடுவீர்கள்? நீங்கள் இரண்டு பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதால் உங்களது மகளும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா" என்று கேட்க எனக்கு ஒரு மாதிரியாகி விட்டது.
சற்றே யோசித்து பார்த்தால் நாம் அனைவருமே ஒரு பெரிய பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது. அது எண்ணம் என்கிற பெரும் சுமை. பிறப்பு முதல் மரணம் வரை இந்த எண்ண பாரத்திலேயே பொழுதை கழிக்கிறோம். நம்மால்
சிந்திக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லையே. இந்த சிந்தனையில் தானே
ஆசை, பொறாமை, வக்கிரம், அன்பு, கருணை என்று பலவித பரிமாணங்கள்
உருவாகின்றன? பறவைகள் மற்றும் விலங்குகள் இது போன்று சிந்திப்பது இல்லையோ?
அதனால் தானோ நம்மை விட மிக ஆனந்தமாக இருக்கின்றன?
மனித இனத்தின் மிகப்பெரிய எதிரியே இந்த சிந்தனை சுமைதான். இதை சற்றே இறக்கி
வைக்க முடியுமா? இறைவா, எண்ண சுமையை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கி
கொடுப்பாயா?